பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கத் தவறுகின்றன. ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்பு அது. இன்று, தனியொரு அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் பிரபாகரன். காவல் துறை, நீதி மன்றம், தரைப்படை, கடற்படை, வான் படை என்று ஒரு தேசத்திடம் இருக்கவேண்டிய அனைத்தும் அவரிடம் உள்ளன. பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் மதிப்பீடு செய்வதற்கு முன்னால் இலங்கை இனப் பிரச்னையின் முழு வரலாறையும் புரிந்துகொள்வது அவசியம். சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இடைவிடாமல் நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தத்தின் ஆணி வேர் எது? யார் தொடங்கினார்கள்? ஏன்? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தத் தீ எரிந்துகொண்டிருக்கப்போகிறது? ராணுவ ரீதியாக மட்டும்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமா? யுத்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம்? தமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வா? பிரபாகரனால் தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தர முடியுமா? ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்திருக்கிறது. தேடப்படும் முதன்மை குற்றவாளி, பிரபாகரன். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளன. யுத்தம் இப்போதைக்கு முடிவதாக இல்லை. இந்தச் சூழலில் விடுதலைப் புலிகளின் எதிர்காலம் என்ன? பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை.
Reviews with the most likes.
There are no reviews for this book. Add yours and it'll show up right here!